புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட இளம் பெண்கள்


புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட இளம் பெண்கள்
x
தினத்தந்தி 14 Sept 2021 10:42 PM IST (Updated: 14 Sept 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்தை இளம்பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி, செப்.
தனியார் நிறுவனத்தை இளம்பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் இருந்தே வேலை
புதுவை நெல்லித்தோப்பு திருவள்ளுவர் சாலையில் தனியார் அவுட்சோர்சிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் வீட்டில் இருந்தபடியே வேலைசெய்யலாம் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதில் சேர ரூ.2 ஆயிரத்து 800 கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி, கடலூர், மரக்காணம் பகுதியை சேர்ந்த சுமார் 600 பேர் பணம் கட்டி சேர்ந்துள்ளனர். மேலும் தங்களுக்கு தெரிந்தவர்களை சேர்த்துவிட்டால் ரூ.600 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் தங்களது நண்பர்கள், உறவினர்களையும் சேர்த்து விட்டனர்.
முற்றுகை
அவ்வாறு உறுப்பினராக சேருபவர்களிடம் 100 பேப்பர்கள் வழங்கி, அதில் உள்ள கட்டத்துக்குள் குறிப்பிட்ட நம்பர் மற்றும் எழுத்துகளை எழுதி கொடுத்தால் குறிப்பிட்ட தொகை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் எழுதி கொடுத்து பணம் பெற்று வந்தனர். கடந்த 6 மாத காலமாக அந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அவ்வாறு எழுதி வந்தவர்களிடம் சரியாக எழுதவில்லை என்று கூறி அந்த நிறுவனத்தினர் பணம் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.
மேலும் அந்த நிறுவனத்தின் மேலாளர் கோபிநாத் என்பவரையும் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வருமானம்
பேப்பர் கட்டங்களில் எழுதப்படும் நம்பர் மற்றும் எழுத்துக்களை கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதன்மூலம் வருமானம் எப்படி வருகிறது? என்பது குறித்து கோபிநாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story