அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்


அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2021 5:51 PM GMT (Updated: 14 Sep 2021 5:51 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
கண்காணிக்க வேண்டும்
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 பேர் உள்ளனர். இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 704 பேர் முதல் தவணையும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 647 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியிருந்தனர். கடந்த 12ந்தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 634 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் பொது இடங்களில் நடமாடும்போதும் முககவசம் அணிய வேண்டும்.
ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், காய்கனி விற்பனை நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணிபுரிபவர்கள் முககவசம் அணிவதுடன் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கையை சுத்தம் செய்தல், உடல் வெப்பநிலை பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிப்பதை உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
மக்களை தேடி மருத்துவம்
சுகாதாரத்துறையின் மூலமாக கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் நல பிரிவில் சிகிச்சைக்கு தேவையான படுக்கைகள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.


Next Story