மாவட்ட செய்திகள்

கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு + "||" + Breaking the bills of the temples and stealing money

கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
செந்துறை, தா.பழூரில் உள்ள கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிய கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செந்துறை
உண்டியலை உடைத்து திருட்டு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பழமலைநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில். இந்த கோவிலை அப்பகுதி கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பழமையான அந்த கோவிலை கடந்த மாதம் பல லட்சம் செலவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர் கோவிலில் உள்ள உண்டியல்களை உடைத்து அதில் உள்ள பணத்தை திருடினர். அப்போது கண்காணிப்பு கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்த மானிட்டரை உடைத்து விட்டு கோவிலுக்கு உள்ளே இருந்த பெரிய உண்டியலை உடைக்க முடியாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் கோவிலுக்குச் சென்ற கிராம மக்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல்களில் திருடு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
ஒருவர் சிறையில் அடைப்பு 
அதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு  கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்கள் திருடியது கிராம மக்களுக்கு தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற கிராம மக்கள் ரவி(வயது 28) என்பவரை செந்துறை போலீசாருக்கு அடையாளம் காட்டினர். மற்ற இருவரும் தப்பி சென்றுவிட்டனர். அதனை தொடர்ந்து செந்துறை போலீசார் நடத்திய விசாரணையில் ரவி அவரது தம்பி சின்னதம்பி(25) மற்றும் ராமலிங்கம்(45) ஆகிய 3 பேரும் கோவில் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றதை
ஒப்புக் கொண்டனர். 
மேலும் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று திருடியதும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் ரவியை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலில் கண்காணிப்பு கேமரா இருக்கும்போது துணிகர திருட்டில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாரியம்மன் கோவில் 
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இக்கோவில் காரைக்குறிச்சி ஸ்ரீபுரந்தான் செல்லும் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. கோவிலின் அருகிலேயே அடுத்தடுத்து வீடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில் வழக்கமான பூஜைகள் முடிந்து கோவிலை நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு கோவில் நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். நேற்று காலை மீண்டும் கோவிலை திறந்தபோது கோவிலில் இருந்த உண்டியலை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.15 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில்  தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.