புதர்மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
அமராவதி ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
அமராவதி ஆறு
கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவையையும், குடிநீர் தேவையையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு.
திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.
கோரிக்கை
இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமராவதி ஆற்றில் பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீமை கருவேல மரங்கள் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் ஆறு தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. கருவேல மரங்களின் வேர்கள் அதிக அளவில் பூமிக்கடியில் ஊடுருவி சென்று நிலத்தடி நீரை உறிஞ்சி வளரும். மேலும் காற்றில் ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது.
இதனால் ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொள்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்வது தடைப்படுகிறது. எனவே விரைவாக சீமை கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story