கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்


கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Sept 2021 11:58 PM IST (Updated: 14 Sept 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

கரூர் நகராட்சி குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கரூர்
குப்பை கிடங்கில் தீ
கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கின்றன. 
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான கரூர், அரவக்குறிச்சி, புகழூர், முசிறி ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் காற்றின் வேகத்தால் தொடர்ந்து தீ பரவி எரிந்து கொண்டே இருந்தது.
2-வது நாளாக...
இந்நிலையில் நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்து குப்பை கிடங்கில் தீ எரிந்து கொண்டு இருந்தது. இதனால் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை கிளறியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்கும் முயற்சியில் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 11 குடிநீர் வண்டிகள், 4 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் இந்த தீயினால் கரூர்-வாங்கல் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அந்த சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் நேற்றும் வாங்கல் சாலையில் பேரிகார்டு அமைத்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

Next Story