நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை


நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 14 Sep 2021 7:46 PM GMT (Updated: 14 Sep 2021 7:46 PM GMT)

பனவடலிசத்திரம் அருகே, நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிரைவர் போலீசில் சரண் அடைந்தார்.

பனவடலிசத்திரம்:

விவசாயி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே கீழநீலிதநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஆயாள்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் சண்முகையா (வயது 60), விவசாயி. இவருக்கு மருதாத்தாள் (56) என்ற மனைவியும், மனோகரன், சுதாகரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

அதே ஊரைச் சேர்ந்த லட்சுமண பாண்டியன் என்பவரது மகன் பெரியதுரை (42). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

நிலத்தகராறு

இவர்கள் இருவருக்கும் ஆயாள்பட்டிக்கு தெற்குப் பகுதியில் அருகருகே தோட்டங்கள் உள்ளன. அந்த தோட்டங்களில் உள்ள நிலத்தில் சர்வே கல் அமைப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் ஆயாள்பட்டி டீக்கடையில் வைத்து சண்முகையாவிடம் பெரியதுரை தனது நிலத்திலுள்ள சர்வே கல் மாறி இருப்பதாக கூறினார். இதுதொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு ஆயாள்பட்டியில் உள்ள தோட்டத்திற்கு பெரியதுரை தனது மோட்டார் சைக்கிளில் சண்முகையாவை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

அங்கு சென்றதும் பெரியதுரை சண்முகையாவிடம் தனது நிலத்தில் உள்ள சர்வே கல் அளவீடு மாறி இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும், என்று மீண்டும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. திடீரென சண்முகையாவை பெரியதுரை கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சண்முகையா இறந்து போனார்.

போலீசில் சரண்

இதன்பின்னர் பெரியதுரை பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து சரண் அடைந்தார்.
உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முகையாவின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்தார்.
சண்முகையா அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story