திருச்சியில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 9 பேர் கைது


திருச்சியில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 9 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2021 7:47 PM GMT (Updated: 14 Sep 2021 7:47 PM GMT)

திருச்சியில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 9 பேர் கைது

திருச்சி கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 22). இவர் காந்திமார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள மாநகராட்சி கழிவறைக்கு சென்றார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த 9 பேர் கொண்ட கும்பல் நிஷாந்தை அரிவாளால், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பழிக்குப்பழியாக நடந்த கொலை என தெரியவந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி தென்னூர் வாமடத்தை சேர்ந்த விஜி என்ற வாழைக்காய் விஜியை ஒரு கும்பல் ஓட, ஓட விரட்டி சென்று படுகொலை செய்தனர். அந்த கொலை வழக்கில் ஜெயச்சந்திரன் உள்பட 7 பேரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர்.
பழிக்குப்பழியாக நடந்த கொலை
இதில் நிஷாந்த் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி சிறையில் இருந்து நிஷாந்த் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது வாழைக்காய் விஜி கொலைக்கு பழிவாங்க நினைத்த அவரது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் நிஷாந்தை படுகொலை செய்ய திட்டம் தீட்டினர். நிஷாந்த் வழக்கமாக ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள மாநகராட்சி கழிவறைக்கு செல்வதை அறிந்து அங்கு நேற்று முன்தினம் அதிகாலை காத்திருந்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் ஈடுபட்ட தென்னூர் வாமடம், அரியமங்கலம், குப்பாங்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சூர்யா (21), ஸ்டீபன் (27), வேலு என்கிற ராஜதுரை (20), வெங்கடேசன் (29), குருமூர்த்தி என்கிற காட்டுராஜா (20), சுரேந்தர்(33), மணிகண்டன் (19), கருப்பு என்கிற அமீது (24), அரவிந்த் (27) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இதில் அரவிந்த் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட வாழைக்காய் விஜியின் சகோதரர் ஆவார்.
வாக்குமூலம்
மேலும், கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "எங்களது நண்பர் வாழைக்காய் விஜியை கடந்த ஆண்டு நிஷாந்த் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் அவர் எங்களில் யாரையாவது கொலை செய்து விடக்கூடும் என்ற அச்சத்தால் நாங்கள் முந்திக் கொண்டு அவரை பழிக்குப்பழியாக தீர்த்து கட்டினோம்" என்று கூறி உள்ளனர். நிஷாந்த் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story