தி.மு.க. முன்னாள் எம்.பி. பேரன் படுகொலை: மருமகன் உள்பட 6 பேர் கைது-பரபரப்பு வாக்குமூலம்


தி.மு.க. முன்னாள் எம்.பி. பேரன் படுகொலை: மருமகன் உள்பட 6 பேர் கைது-பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 14 Sep 2021 8:32 PM GMT (Updated: 14 Sep 2021 8:32 PM GMT)

சேந்தமங்கலம் அருகே தி.மு.க. முன்னாள் எம்.பி. பேரன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மருமகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம்:
முன்னாள் எம்.பி. பேரன்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கல்லிட்டேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜி.பி.சோமசுந்தரத்தின் பேரன் ஆவார். ராஜேந்திரன் தனது மனைவி சுகுணாவுடன் கல்லிட்டேரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். 
இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் சுபி சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நவீன் (33) என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் ஆத்தூரில் வசித்து வருகிறார்.
படுகொலை
இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி இரவு ராஜேந்திரன், சுகுணாவுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை கத்தியால் குத்தியது. இதில் மார்பு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர், அங்கேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த படுகொலை குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அவருடைய மருமகன் நவீனை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராஜேந்திரனை கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்பு கொண்டார். 
வாக்குமூலம்
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மாமனார் ராஜேந்திரனுக்கு அதிகளவில் சொத்துகள் உள்ளன. இந்த சொத்தில் எனக்கு பங்கு தரவேண்டும் என்று நான் கேட்டு வந்தேன். ஆனால் அவர் எனக்கு பங்கு தர மறுத்து வந்தார். இதனால் நான் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது நிலத்தை பேளுக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கு விற்றார். அந்த பணத்தை கேட்டபோது எங்களுக்குள்  தகராறு ஏற்பட்டது.
இதனால் நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கூலிப்படையை சேர்ந்த கல்லிட்டேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (43), சேலம் ஊத்துமலை அடிவாரத்தை சேர்ந்த மகேந்திரன் (28), ஆத்தூர் மஞ்சினியை சேர்ந்த சுரேஷ் (34), சேலம் எருமாபாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் (25) ஆகியோருக்கு பணம் கொடுத்து அவரை கொலை செய்ய அனுப்பி வைத்தேன். அவர்களும் ராஜேந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக பேளுக்குறிச்சி போலீசார் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து போலீசார் கூலிப்படையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மகேந்திரன், சுரேஷ், ஜீவானந்தம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து நவீன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். 
தி.மு.க. முன்னாள் எம்.பி. பேரன் கொலை வழக்கில் அவருடைய மருமகனே கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது சேந்தமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story