நாமக்கல்லில் ஓட்டல்களில் 65 கிலோ இறைச்சி பறிமுதல்


நாமக்கல்லில் ஓட்டல்களில் 65 கிலோ இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Sept 2021 2:02 AM IST (Updated: 15 Sept 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 65 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

நாமக்கல்:
அதிகாரிகள் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நாமக்கல் நகரில் பிரதான சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அசைவ ஓட்டல்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
65 கிலோ இறைச்சி பறிமுதல்
20 ஓட்டல்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் செயற்கை நிறமிகள் அதிகம் சேர்க்கப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 65 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளும் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 ஓட்டல்களுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீசு வழங்கினர்.
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story