குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 14 Sep 2021 8:58 PM GMT (Updated: 14 Sep 2021 8:58 PM GMT)

தெங்கம்புதூர் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மேலகிருஷ்ணன்புதூர், 
தெங்கம்புதூர் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
வாலிபர்
நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் அடுத்த பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லிங்கசிவா (வயது 31), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை பணிக்கன்குடியிருப்பு பகுதியில் உள்ள பால்குளத்திற்கு குளிக்க சென்றார். அதைதொடர்ந்து லிங்கசிவா குளத்திற்கு சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. 
இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை செல்லம் மற்றும் உறவினர்கள் பால் குளத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது குளத்தின் கரையில் உள்ள படித்துறையின் அருகில் லிங்கசிவாவின் துணி மற்றும் உடமைகள் இருந்தன. ஆனால் அவரை காணவில்லை.
சாவு 
இதையடுத்து குளத்தின் உள்ளே பார்த்தபோது சற்று தொலைவில் தண்ணீரில் லிங்கசிவா மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குளத்தில் இறங்கி லிங்கசிவாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து தந்தை செல்லம் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். லிங்க சிவாவுக்கு நீச்சல் தெரியாததால், படித்துறையில் நின்று குளிக்கும்போது, படித்துறையில் உள்ள பாசி வழிக்கு குளத்துக்குள் விழுந்திருக்கலாம் என்றும், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். மேம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசுார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து பலி
இதேபோல கடந்த 2-ந் தேதி இதே குளத்தின் படித்துறையில் நின்று குளித்த பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த சரோஜா (60) என்ற பெண் படித்துறையில் உள்ள பாசியால் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு இந்த குளத்தில் ஒருவர் இறந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் லிங்கசிவா பலியாகிவிட்டார். 
குளத்தில் குளிப்பவர்கள் அடுத்தடுத்து பலியாகி வரும் சம்பவம் அந்த குளத்தில் குளித்து வரும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த குளத்தில் வளர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளையும், பாசிகளையும் முற்றிலும் அகற்றவும் அங்கு ஆபத்தான பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோகம்
இறந்துபோன லிங்கசிவாவுக்கு சுகன்யா என்ற மனைவியும், 3 வயதில் மகளும் உள்ளனர். லிங்கசிவாவின் மனைவி சுகன்யா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். 
குளத்தில் குளிக்க சென்றபோது வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story