கோலாருக்கு தினமும் 40 கோடி லிட்டர் நீர் வழங்க நடவடிக்கை - சட்டசபையில் பசவராஜ் பொம்மை தகவல்
பெங்களூருவில் கழிவுநீரை சுத்திகரித்து கோலாருக்கு தினமும் 40 கோடி லிட்டர் நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
40 கோடி லிட்டர் நீர்
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சிவசங்கரரெட்டி, கோரமங்களா-சல்லகட்டா அதாவது கே.சி.வேலி திட்டம் மூலம் பெங்களூருவில் உற்பத்தியாகும் கழிவுநீரை சுத்திகரித்து கோலார், சிக்பள்ளாப்பூருக்கு கொண்டு வருவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக கழிவுநீரை சுத்திகரித்து கோலார் மாவட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 40 கோடி லிட்டர் கழிவுநீரை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் மறுசுழற்சி செய்து அதை கோலார் மாவட்டத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அது 2 நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதை குடிநீர் நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது. ஏரிகளில் நிரப்பி அதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும். சுத்திகரிக்கப்பட்ட 40 கோடி லிட்டரை நீரை பெங்களூரு வடிகால் வாரியம் வழங்கவில்லை என்று உறுப்பினர்கள் கூறினர். இந்த திட்டத்தில் தினமும் 40 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி பேசுகையில், ‘‘பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, கோலாருக்கு நீர் அனுப்பப்படுகிறது. ஆனால் செல்லும் வழியில் மக்கள் அந்த நீரை குழாய் மூலம் உறிஞ்சி விடுகிறார்கள். இதனால் கடைசியில் சேரும் இடத்தில் தண்ணீர் அளவு குறைவாக போகிறது. இந்த நீரை குடிநீருக்கு பயன்படுத்தக்கூடாது என்று சட்டமே உள்ளது. முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசனை நடத்தி தினமும் 40 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் கோலார், சிக்பள்ளாப்பூருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Related Tags :
Next Story