எத்தினலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய மாட்டோம் - சட்டசபையில் பசவராஜ் பொம்மை அறிவிப்பு


எத்தினலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய மாட்டோம் - சட்டசபையில் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 9:17 PM GMT (Updated: 14 Sep 2021 9:17 PM GMT)

எத்தினஒலே குடிநீர் திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய மாட்டோம் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். முன்னதாக எத்தினஒலே குடிநீர் திட்டம் தொடர்பாக பரமேஸ்வர் - மாதுசாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

எத்தினஒலே குடிநீர் திட்டம்

  கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் பரமேஸ்வர், எத்தினஒலே குடிநீர் திட்டம் தாமதமாவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

  கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 2 ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனால் குடிநீரில் மாசு ஏற்பட்டு அந்த மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அந்த 2 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எத்தினஒலே குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இது கடந்த 2012-ம் ஆண்டு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் அனுமதி

  4 பெரிய நிறுவனங்கள் மூலம் திட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதியையும் பெற்றோம். மேகதாது உள்ளிட்ட திட்டங்களுக்கு இன்னும் நம்மால் சுற்றுச்சூழல் அனுமதியை பெற முடியவில்லை. எத்தினஒலே குடிநீர் திட்டம் மூலம் 21 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை பயன்படுத்த முடிவு திட்டமிடப்பட்டது. பிறகு அது 24 டி.எம்.சி.யாக அதிகரிக்கப்பட்டது.

  இதில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு 10 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீரை தேக்கி வைக்க ஒரு சிறிய அணையை கட்ட வேண்டியது அவசியம். நீரை தேக்காமல் குடிநீருக்கு வினியோகம் செய்ய முடியாது. ஆனால் அந்த அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க அணை கட்டுவதில் சிக்கல் எழுந்ததை அடுத்து அந்த திட்டத்தில் திருத்தம் செய்து, அது 5 டி.எம்.சி. கொள்ளளவாக குறைக்கப்பட்டது. இதையும் குறைத்தால் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் கொடுக்க முடியாது. அதனால் எத்தினஒலே குடிநீர் திட்டம் மீண்டும் திருத்தப்படாமல் அமல்படுத்தப்படும்.

தீர்வு காணப்படும்

  ஆனால் இதற்கும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு பணிகள் முடங்கியுள்ளன. இந்த அணை தொட்டபள்ளாப்புரா-கொரட்டகெரே இடையே பைரகுன்டலு என்ற இடத்தில் அமைகிறது. தொட்டபள்ளாப்புரா பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த நிலத்திற்கு உள்ளூர் சூழ்நிலைப்படி ஏக்கருக்கு ரூ.32 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

  ஆனால் கொரட்டகெரேவில் உள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.9 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் ஏக்கருக்கு ரூ.32 லட்சம் வழங்க வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அங்கு நிலவும் சூழ்நிலைப்படி அவ்வளவு நிவாரணத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து விரைவில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். இதன் மூலம் எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மந்திரி கோவிந்த் கார்ஜோள்

  முன்னதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியதாவது:-
  எத்தினலே குடிநீர் திட்ட பணிகளுக்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் பெரும்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தொட்டபள்ளாபுராவில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.32 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதே அளவு நிவாரணத்தை கொரட்டகெரே விவசாயிகள் கேட்கிறார்கள். அதனால் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

  அந்த விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறேன். ஆயினும் அங்கு ஒருவரின் காபி தோட்டம் உள்ளது. அவர் நிலத்தை கொடுக்க மறுக்கிறார். அவரையும் இன்று (நேற்று) மதியம் 3 மணிக்கு அழைத்து பேச முடிவு செய்துள்ளேன். அதனால் அவரது 10 குன்டா நிலமும் பெறப்படும். இது தொடர்பாக எத்தினஒலே குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். குறித்த காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படாத நிலையில் இதன் மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

39 ஏக்கர் நிலம்

  இந்த திட்டத்தின் முதல் கட்ட திட்டத்தில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 10 சதவீத பணிகள் பாக்கி உள்ளன. அந்த பணிகளும் விரைவாக முடிக்கப்படும். தொட்டப்பள்ளபுரா-கொரட்டகெரே பகுதியில் அணை கட்ட இன்னும் 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம். இன்னும் 39 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது.
  இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

  அதைத்தொடர்ந்து சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி பேசியதாவது:-
  எத்தினஒலே குடிநீர் திட்டத்திற்காக 5,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். தொட்டபள்ளாப்புராவில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் துமகூரு மாவட்டத்தில் நிலத்தின் மதிப்பு ஏக்கர் ரூ.2 லட்சம் தான். ஆனால் கொரட்டகெரேயில் விவசாயிகளின் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.9 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் கேட்பது போல் ஏக்கருக்கு ரூ.32 லட்சம் வழங்க முடியாது. இது சாத்தியமில்லை.
  இவ்வாறு மாதுசாமி கூறினார்.

கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு

  மந்திரி மாதுசாமியின் இந்த கருத்துக்கு பரமேஸ்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. பரமேஸ்வர், ‘‘நீங்கள் நிவாரணம் வழங்க முடியாது என்று கூறலாம்’’ என்றார். அதற்கு மாதுசாமி, ‘‘நீங்கள் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த பிரச்சினைக்கு ஏன் தீர்வு காணவில்லை’’ என்று ஆவேசத்துடன் கேட்டார்.

  அந்த நேரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலையிட்டு இருவரின் வாக்குவாதத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார். மந்திரி மாதுசாமி, பரமேஸ்வர் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

9 ஆண்டுகள் ஆகின்றன

  முன்னதாக கேள்வி எழுப்பிய பரமேஸ்வர் பேசுகையில், "எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது அதன் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 912 கோடி ஆகும். ஆனால் பணிகள் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இந்த பணிகள் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை ரூ.8,200 கோடி செலவாகியுள்ளது. ஒரு கட்ட பணிகள் கூட நிறைவு பெறவில்லை. 

ஏற்கனவே இந்த திட்டம் திருத்தப்பட்டது. இப்போது இந்த திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்ய அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் திட்ட மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படுகிறது. அதனால் இந்த திட்டத்தை மீண்டும் மாற்றுவதை கைவிட வேண்டும். இந்த திட்ட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரட்டகெரே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

Next Story