நீலகிரியில் முதல் முறையாக வழக்கறிஞரான திருநங்கை


நீலகிரியில் முதல் முறையாக வழக்கறிஞரான திருநங்கை
x
தினத்தந்தி 15 Sept 2021 8:42 PM IST (Updated: 15 Sept 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் முதல் முறையாக வழக்கறிஞரான திருநங்கை

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சவுமியா சாசு. இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயின்று முடித்தார். 

தொடர்ந்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக பயிற்சி பெற உள்ளார். இந்த நிலையில் நேற்று நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாயை சந்தித்து பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பணியாற்ற பதிவு செய்ததை காண்பித்து வாழ்த்து பெற்றார்.  கலெக்டர் அவரை பாராட்டினார். அப்போது சமூக நல அலுவலர் (பொறுப்பு) தேவகுமாரி உடனிருந்தார்.

இதுகுறித்து திருநங்கை சவுமியா கூறும்போது, தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை ஒருவர் கர்நாடகாவில் சட்ட படிப்பு முடித்து தமிழகத்தில் பதிவு செய்தார். முதல் முறையாக நான் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயின்று பார் கவுன்சிலில் பதிவு செய்து உள்ளேன்.

 வழக்கறிஞராக பணியாற்ற உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் திருநங்கைகளை வழிநடத்துவதோடு, 5 ஆண்டுகள் பயிற்சி பெற்று அனைத்து மக்களுக்கும் சமூக சேவை புரிவேன். நீதிபதி ஆவதே எனது லட்சியம். மேலும் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் கலந்து கொள்ள உள்ளேன்.

 இதில் தேர்ச்சி பெற்றால் நிரந்தர உறுப்பினராக வாய்ப்பு உள்ளது என்றார். நீலகிரியில் முதல் முறையாக திருநங்கை வக்கீல் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story