புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு


புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2021 10:51 PM IST (Updated: 15 Sept 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற 30-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, செப்.16-
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற 30-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
ஊரடங்கு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று 2-ம் அலையை கட்டுப்படுத்த அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில் ஊரடங்கை பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 30-ந் தேதி வரை நீடித்து அரசு அறிவித்துள்ளது. 
இதுகுறித்து புதுவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இரவு 10 மணி வரை...
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற 30-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கப்படுகிறது. இதில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 
அனைத்து விதமான கடைகளுக்கும் கூடுதலாக ஒருமணி நேரம் வரை திறந்திருக்க தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காய்கறி மற்றும் பழக்கடைகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கலாம். 
அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம். இந்த கடைகள் முன்பு இரவு 9 மணி வரையே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓட்டல்கள்
ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை திறக்கலாம். டீ கடைகள், ஜூஸ் கடைகள் ஆகியவைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம். மதுபான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையும், சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபான பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரை செயல்படலாம். 
கடற்கரை மற்றும் பூங்காக்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story