உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க நாககுப்பம் கிராம மக்கள் முடிவு
தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வலியுறுத்தி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க நாககுப்பம் கிராம மக்கள் முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சின்னசேலம்
நாககுப்பம் கிராமம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, பாண்டியங்குப்பம் வருவாய் கிராமத்தின் துணை கிராமமான நாககுப்பம் கிராமத்தில் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை போன்ற அரசு அங்கீகார அடையாள அட்டைகளில் உள்ள முகவரியில் நாககுப்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குள்ள மக்களின் விவசாய நிலங்கள் சர்வே எண் 1 முதல் 159 வரை 264 ஹெக்டேர் பரப்பளவு பாண்டியங்குப்பம் கிராம எல்லையிலும், சர்வே எண் 66 முதல் 162 வரை 357 ஹெக்டேர் பரப்பளவு மறவாநத்தம் வருவாய் கிராம எல்லையிலும் உள்ளது.
தனி கிராமமாக...
நாககுப்பம் கிராம மக்கள் விவசாயம் சம்பந்தமான பல்வேறு தேவைகளுக்காக 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாண்டியங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கும், 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறவாநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கும் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
எனவே பாண்டியங்குப்பம் கிராம மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகையை கொண்ட நாககுப்பத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என கிராமமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் புறக்கணிப்பு
இந்த நிலையில் நாககுப்பம் கிராமத்தை தனி கிராமமாக அறிவிக்கப்படாததை கண்டித்தும், தனி கிராமமாக அறிவிக்க வலியுறுத்தியும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவுசெய்துள்ளனர். மேலும் இதை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வீட்டின் முன்பு கோரிக்கைகளுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story