ஊராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து தர்ணா
ஊராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து, தர்ணாவில் ஈடுபட்ட நபரால் நத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:
செந்துறை அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளிவாடி. இவருக்கு, அதே பகுதியில் 1¾ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்திலேயே அவர் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு செல்லும் ஓடைப்பாதையை அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் வெள்ளிவாடி புகார் செய்தார். இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளிவாடி, நத்தம் யூனியன் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பேரில் வெள்ளிவாடி அங்கிருந்து சென்றார். இதனால் நத்தத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story