கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு


கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 12:36 AM IST (Updated: 16 Sept 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கதவாளம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தன் (வயது 80). இவர் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின் உடலில் தீ எரிந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார். இதைபார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து முதியவரை தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று முதியவரிடம் விசாரனை நடத்தி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த தீக்காயம் அடைந்த முதியவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நிலப்பிரச்சினை

தீக்குளித்த நந்தன் அவரது சொந்த ஊரில் 3 செண்ட் நிலத்தை கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார். அதற்கு பதில் வேறு இடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் ஊரில் பஞ்சாயத்து பேசியதாகவும், இதில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம உதவியாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனால் அவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story