பெட்ரோல் ஊற்றி வியாபாரி, மனைவியுடன் தீக்குளிப்பு


பெட்ரோல் ஊற்றி வியாபாரி, மனைவியுடன் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 1:02 AM IST (Updated: 16 Sept 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வறுமை காரணமாக பிஸ்கட் வியாபாரி, தனது மனைவியுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி, செப்.16-
திருச்சியில் வறுமை காரணமாக பிஸ்கட் வியாபாரி, தனது மனைவியுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிஸ்கட் வியாபாரி
திருச்சி, தென்னூர் மூலக்கொல்லைத்தெரு ரெஜிமெண்டல் பஜார் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 51). இவரது மனைவி மகாலட்சுமி (49). இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இவர் கோர்ட்டு எதிரே உள்ள ஒரு பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகிறார்.
கொரோனா காலக்கட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பேக்கரி கடை திறக்கப்பட வில்லை. இதனால், வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைக்கு தள்ளப்பட்டார். எனினும் அதில் இருந்து மீள்வதற்காக தென்னூர் அண்ணாநகர் உழவர்சந்தையில் தம்பதி இருவரும் பிஸ்கட் வியாபாரம் செய்து வந்தனர். அதிலும் போதிய வருவாய் கிடைக்கவில்லை.
தம்பதி தீக்குளிப்பு
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு, நடராஜன், மகாலட்சுமி தங்கி இருந்த வீட்டின் முதல் மாடியின் படுக்கை அறை ஜன்னல் கண்ணாடி டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறி, வீட்டிற்குள் இருந்து புகை மூட்டம் வெளியானது. மேலும் தம்பதி இருவரும் அலறும் சத்தமும் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கும், தில்லைநகர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சிறிய அளவிலான படுக்கை அறையில் பாயில் படுத்திருந்த அவர்கள், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய நடராஜன், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 மாதத்திற்கு முன்புதான் வந்தனர்
நடராஜன், மகாலட்சுமி இருவரும் தங்களது உறவினர் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் தென்னூரில் ரெஜிமெண்டல் பஜாரில் உள்ள அப்துல்ரகுமான் என்பவரது குடியிருப்பில் முதல் மாடிக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
தினமும் காலை எழுந்ததும் தென்னூர் உழவர்சந்தை திடலுக்கு பிஸ்கட் வியாபாரத்திற்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர். அதில்போதிய வருமானம் கிட்டவில்லை. மேலும் நடராஜனுக்கு உடல்நல பாதிப்பும் இருந்துள்ளது. குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை விட, வறுமை அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. எனவே, இருவரும் உயிரை மாய்த்து கொள்வது என்ற முடிவுக்கு வந்ததன் காரணமாக, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முடிவுக்கு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பெட்ரோல் ஊற்றி இருவரும் தீக்குளித்த சம்பவத்தால் படுக்கை அறையில் இருந்த டி.வி, படுக்கை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயிருந்தன.
தம்பதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தில்லை நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story