கொரோனா தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு பார்வை குறைபாடு
ஆலூர் தாலுகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹாசன்:
தடுப்பூசி போட்ட பெண்
ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா அடிபைலு கிராமத்தில் வசித்து வருபவர் ஆஷா. இவர் கடந்த மாதம்(ஆகஸ்டு) ஆலூர் அருகே ராயரகொப்பலு கிராமத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு சென்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பிறகு வீட்டுக்கு வந்த அவருக்கு தீராத தலைவலி, கை, கால் வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அவருக்கு திடீரென பார்வை குறைபாடும் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதற்கு கொரோனா தடுப்பூசி போட்டதுதான் காரணம் என்று ஆஷாவும், அவரது குடும்பத்தினரும் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதையடுத்து அவரை சுகாதார துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஹாசன் டவுனில் உள்ள ஹிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
தடுப்பூசி தரமானது
அதையடுத்து அவர் ஹாசன் டவுன் ஹிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி ஹிம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டரும், மாவட்ட சுகாதார துறை அதிகாரியுமான சதீஷ் கூறுகையில், ‘‘இதுவரையில் கொரோனா தடுப்பூசி போட்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. தடுப்பூசி தரமானது தான். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை குறைபாடுகள் குறித்து பரிசோதித்து வருகிறோம்’’ என்றார்.
Related Tags :
Next Story