கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெங்களூருவில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் பிரமாண்ட பேரணி
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெங்களூருவில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.
பெங்களூரு:
பிரமாண்ட பேரணி
கர்நாடகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் சம்பளம் வழங்க வலியுறுத்தி பெங்களூரு விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், ரெயில் நிலைய வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், நிலுவையில் உள்ள சம்பளத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி விதான சவுதாவை நோக்கி சென்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
ஆனால் அவர்களை பெங்களூரு சுதந்திர பூங்காவில் வைத்தே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சுதந்திர பூங்கா அருகே கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், இதற்காக அரசு ரூ.700 கோடி விடுவிக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்பவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நேற்று இரவு வரை இந்த போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் போராட்டம் நடத்திய கிராம பஞ்சாயத்து ஊழியர்களிடம் கிராம பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
கிராம பஞ்சாயத்து ஊழியர்களின் இந்த பேரணியால் சேஷாத்திரி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, மெஜஸ்டிக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story