கிருஷ்ணா மேலணை திட்டத்தை அமல்படுத்த ரூ.78 ஆயிரம் கோடி தேவை - மந்திரி கோவிந்த் கார்ஜோள் தகவல்
கிருஷ்ணா மேலணை திட்டத்தை அமல்படுத்த ரூ.78 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்று மேல்-சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கிருஷ்ணா மேலணை திட்டம்
கர்நாடக மேல்-சபையில் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல், கிருஷ்ணா மேலணை திட்டம் குறித்து பிரச்சினை கொண்டு வந்தார். அதுகுறித்து விவாதிக்க மேலவை தலைவர் அனுமதி வழங்கினார். அதன் அடிப்படையில் நடந்த விவாதத்திற்கு நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் பதிலளித்து பேசியதாவது:-
கிருஷ்ணா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டத்திற்காக கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் ரூ.7,728 கோடி செலவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த கூட்டணி ஆட்சி காலத்தில் ரூ.1,295 கோடி செலவு செய்யப்பட்டது. பின்னர் அமைந்த பா.ஜனதா ஆட்சியில் ரூ.3,326 கோடி செலவழிக்கப்பட்டு இருக்கிறது.
நீர்ப்பாசன வசதிகள்
இந்த திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்துவது ஒரு பெரிய சவாலான பணியாக உள்ளது. 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி நிலங்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒரு லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.78 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்த திட்டத்தை செயல்படுத்த போராட்டங்கள் நடைபெற்றன. கொய்னா அணை மூலம் 37 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தாலிகோடி வரைக்கும் கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதற்குள் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கர்நாடகத்தில் மைசூரு அரசு அமைந்தது. அப்போது மும்பை அரசு, ரூ.2 கோடி வழங்கினால் இந்த திட்ட பணிகளை நிறைவேற்றுவதாக கூறியது. ஆனால் இந்த தொகையை மைசூரு அரசு வழங்க மறுத்துவிட்டது. ஒருவேளை இந்த தொகையை வழங்கி இருந்தால் அகண்ட விஜயாப்புரா மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதிகள் கிடைத்திருக்கும்.
விரிவான திட்ட அறிக்கை
மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்க கிருஷ்ணா நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அது கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதன்படி 130 டி.எம்.சி. நீரை பயன்படுத்த ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கு நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளில் எந்த அரசும் இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எங்கள் அரசு மீது பொறுப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த ஆட்சியில் ரூ.7,728 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது.
தடைகளை அகற்ற...
எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சில தடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு கையகப்படுத்தும் அனைத்து நிலங்களுக்கும் ஒரே மாதிரியான விலை வழங்க முடியாது. அதனால் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் பேசினார்.
Related Tags :
Next Story