கார் மோதியதால் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலியான சென்னை இளம்பெண் உள்பட 2 பேர் பற்றிய உருக்கமான தகவல்கள்
பெங்களூருவில் கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து விழுந்து பலியான சென்னை இளம்பெண் உள்பட 2 பேர் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது. காரை ஓட்டி வந்த என்ஜினீயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
கார் மோதியது
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளுடன் நின்ற ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. கார் மோதிய வேகத்தில் மேம்பாலத்தில் இருந்து வாலிபரும், இளம்பெண்ணும் தூக்கி வீசப்பட்டு கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் விழுந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
மேலும் கார் டிரைவரும் பலத்தகாயம் அடைந்தார். அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் பலியான இளம்பெண் மற்றும் அவருடன் இருந்த வாலிபர் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை இளம்பெண்
விபத்தில் பலியான வாலிபா் பெங்களூரு ஜே.பி.நகர் அருகே 8-வது ஸ்டேஜில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ப்ரீத்தம்குமார்(வயது 30) ஆவார். அந்த இளம்பெண் சென்னையை சேர்ந்த கிருத்திகா ராம்(26) ஆவார். இவர்களில் ப்ரீத்தம்குமார், பெங்களூரு அருகே சர்ஜாபுராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் மேலாளராகவும், கிருத்திகா மகாதேவபுராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் டீம் லீடராகவும் பணியாற்றினார்கள்.
2 பேருக்கும் சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். ப்ரீத்தம்குமாரும், கிருத்திகாவும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பரிடம் இருந்து தமிழக பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு, ஜாலியாக வலம் வருவதற்காக ப்ரீத்தம்குமாரும், கிருத்திகாவும் வெளியே புறப்பட்டு சென்றுள்ளனர். மடிவாளா அருகே சில்க் போர்டு ஜங்ஷனில் இருந்து எலெக்ட்ரானிக் சிட்டி நோக்கி 2 பேரும் சென்றுள்ளனர்.
40 அடி பள்ளத்தில் விழுந்து...
எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியாகி விட்டதால், மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் இருந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் தான் அதிவேகமாக வந்த கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து ப்ரீத்தம்குமாரும், கிருத்திகாவும் தூக்கி வீசப்பட்டு பலியாகி இருந்தார்கள். அதாவது மேம்பாலத்தில் இருந்து 30 முதல் 40 அடி பள்ளத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில் விழுந்திருந்தால் தலை நசுங்கி பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் பெட்ரோல் இல்லாததால், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்களா? அல்லது மேம்பாலத்தில் நின்றபடி 2 பேரும் வேடிக்கை பார்த்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்கு காரணமான காரை நிதேஷ்(23) என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. இவர், பொம்மசந்திரா அருகே திருபாளையா கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. நிதேஷ் என்ஜினீயர் ஆவார்.
பரபரப்பு
மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி நின்றதால், படுகாயத்துடன் நிதேஷ் உயிர் தப்பித்து இருந்தார். மேலும் காரை அவர் அதிவேகமாக ஓட்டி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து இந்த கோர விபத்து அரங்கேறி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கார் டிரைவர் நிதேஷ் மீது எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிய கார்
இந்த விபத்தில் நிதேஷ் தனது காரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நிதேஷ் விதிமுறைகளை மீறி அதிவேகமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதால், அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை பார்த்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பதறினர்.
விபத்து வீடியோ வெளியாகி பரபரப்பு
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது மேம்பாலத்தில் நிற்கும் ப்ரீத்தம்குமார், கிருத்திகா ஆகியோர் மீது கார் மோதுவது, மோதிய வேகத்தில் மேம்பாலத்தில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Related Tags :
Next Story