கிராமம் வளர்ச்சி அடையும் வரை திருமணம் செய்ய மாட்டேன் - இளம்பெண் அதிரடி அறிவிப்பு


கிராமம் வளர்ச்சி அடையும் வரை திருமணம் செய்ய மாட்டேன் -  இளம்பெண் அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 3:50 AM IST (Updated: 16 Sept 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

தன்னுடைய கிராமம் வளர்ச்சி அடையும் வரை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று இளம்பெண் ஒருவர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு:

திருமணம் செய்ய மாட்டேன்

  பொதுவாக பலரும் தங்களது குடும்ப சூழ்நிலைகளால் தனது திருமணத்தை தள்ளிவைப்பது வழக்கம். ஆனால் கர்நாடகத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கிராமம் வளர்ச்சி அடையும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

  தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம். இந்த கிராமம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லை. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லாததால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இளம்பெண் அதிருப்தி

  அத்துடன் இணையதள வசதி, செல்போன் சேவையும் அங்கு இல்லை. முறையான சாலை இல்லாததால் பஸ்களும் இதுவரை அந்த கிராமத்திற்கு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரும் நாள்தோறும் பல சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். தனது கிராமத்தின் நிலையையும், மக்களின் சிரமங்களையும் கண்கூடாக பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த பிந்து என்ற இளம்பெண் அதிருப்தி அடைந்தார்.

  தனது கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி பிரதமர், முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதினார். அதற்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் பதில் கடிதம் அனுப்பினார். அதில் விரைவில் உங்கள் ஊரின் பிரச்சினைகளை தீர்வுகாணப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீர்வு காணப்படவில்லை

  இருப்பினும் இதுவரை எச்.ராமபுரா கிராமத்தில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்த இளம்பெண், தனது ஊருக்கு முறையான சாலை வசதி, இணையதள வசதி, செல்போன் சேவை, போக்குவரத்து சேவை கிடைக்கும் வரை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. தங்கள் கிராமம் வளர்ச்சி அடைந்த பிறகே தான் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்துள்ளார்.

Next Story