மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னை மந்தைவெளியைச்சேர்ந்தவர் கோபி என்ற உருளை கோபி (வயது 39). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆவின் பால் விற்பனை கடையும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கோபி மயிலாப்பூர் அப்பு தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கோபியை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த படுகொலை சம்பவம் பற்றி மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் கவுதமன் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் முன்பகை காரணமாகவே கோபி படுகொலை செய்யப்பட்டார் என்று தெரிய வந்தது. கடந்த 2020-ம் ஆண்டு மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளுக்கு கோபி உதவி செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கோபியை, மணியின் கூட்டாளிகள் போட்டு தள்ளி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.கண்காணிப்பு கேமரா உதவியுடன், கொலையாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story