2 வாலிபர்கள் தலை துண்டித்து கொலை


2 வாலிபர்கள் தலை துண்டித்து கொலை
x
தினத்தந்தி 16 Sept 2021 6:01 AM IST (Updated: 16 Sept 2021 6:01 AM IST)
t-max-icont-min-icon

2 வாலிபர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் குப்பம் மீனவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேர் படுகொலை செய்யப்பட்டு படகுகள், வீடுகள் எரிக்கப்பட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. 2019-ம் ஆண்டு கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த தேசிங்கு என்பவர் படுகொலை செய்யப்பட்டு மீண்டும் கலவரம் வெடித்தது.

அதில் குற்றம் சாட்டப்பட்டவர் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 26). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். அபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது தலையை துண்டித்து உடலை வீட்டின் மாடியில் போட்டுவிட்டு தலையை எடுத்து கொண்டு கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே 4 நாட்களுக்கு முன்பு சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த அட்டு ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் வீசிவிட்டு சென்றனர்.

தகவல் அறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தினர்.

2019-ம் ஆண்டு கடப்பாக்கத்தில் தேசிங்கு கொலை செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சித்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த அட்டு ரமேஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ரஞ்சித் குமார் கொலை குறித்து அவரது அண்ணன் கண்ணன் சூனாம்பேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் அட்டு ரமேஷின் உறவினர்கள் ரஞ்சித்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (23). நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து வேல்முருகனை காணவில்லை என அவரது தாயார் சாமுண்டீஸ்வரி சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தர்காஸ் தேவாலயம் அருகே வாலிபர் ஒருவரின் தலை மட்டும் இருப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான பொலீசார் விசாரணை நடத்தி தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து உடலை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நடுவீரப்பட்டு தர்காஸ் பகுதி அருகே ஏரிக்கரையோரம் முள்புதர் பகுதியில் கிடந்த உடலை கண்டுபிடித்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் என்ன? எதற்காக இந்த கொலை நடந்தது? கொலை சம்பவத்தில் தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். வாலிபரை கொலை செய்து தலை தனியாகவும் உடல் தனியாகவும் இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story