திருவள்ளூர் அருகே ரூ.1½ கோடி அரசு நிலம் மீட்பு


திருவள்ளூர் அருகே ரூ.1½ கோடி அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 16 Sept 2021 4:57 PM IST (Updated: 16 Sept 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தில் உள்ள போத்தன் தாங்கள் ஏரியின் கரைப்பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். இதனால் பொதுமக்கள் அந்த ஏரியை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

இது தொடர்பாக போளிவாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார் சசிகலா, வருவாய் ஆய்வாளர் ஆதி ஈஸ்வரன் மற்றும் வெங்கத்தூர் குறுவட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியின் கரையை ஒட்டி 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டு இருந்த இரும்பு வேலிகளை முழுவதுமாக பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி அதனை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி. மேலும் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் எச்சரித்தார்.

Next Story