தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் 14 பேரிடம் ரூ.38 லட்சம் மோசடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் 14 பேரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரபல நிறுவனத்தின் பெயரில் 14 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38¼ லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோசடி
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தார். இதற்கான ஆன்லைன் மூலம் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் பங்கு மீது ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 186 முதலீடு செய்து உள்ளார். பின்னர் அந்த நிறுவனம், பிரபல நிறுவனத்தின் பெயரை ஒத்து இருந்த மற்றொரு மோசடி நிறுவனம் என்பது தெரியவந்தது.
இதேபோன்று மேலும் 12 பேர் அந்த மோசடி நிறுவனத்தின் பங்குகள் மீது முதலீடு செய்து உள்ளனர். இதனால் 13 பேர் முதலீடு செய்த மொத்தம் ரூ.37 லட்சத்து 18 ஆயிரத்து 949 பணத்தை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து ஐஸ்வர்யா தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார்.
அதன்பேரில், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வேலை வழங்குவதாக பெண்ணிடம் மோசடி
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 32). இவருடைய செல்போனுக்கு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக ஒரு லிங்க் வந்து உள்ளது. இந்த லிங்கை தொட்டதும் வேறு ஒரு சமூகவலை தளத்துக்குள் சென்று உள்ளது. பின்னர் 8 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிபந்தனைகளின்படி அவர் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 200 வரை பணம் செலுத்தி உள்ளார். 8 நிபந்தனைகளையும் முடித்த பிறகு, அவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, ஆன்லைனில் வேலை பெற்றுத்தருவதாக பணத்தை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திகா தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story