மனைவி இருக்கும் போது 2வது திருமணம் செய்த, அரசு போக்குவரத்துக்கழக எலெக்ட்ரீசியனுக்கு உடுமலை கோர்ட்டில் 2 ஆண்டுகள் சிறை
மனைவி இருக்கும் போது 2வது திருமணம் செய்த, அரசு போக்குவரத்துக்கழக எலெக்ட்ரீசியனுக்கு உடுமலை கோர்ட்டில் 2 ஆண்டுகள் சிறை
உடுமலை,
உடுமலையில், மனைவி இருக்கும் போது 2-வது திருமணம் செய்த, அரசு போக்குவரத்துக்கழக எலெக்ட்ரீசியனுக்கு உடுமலை கோர்ட்டில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
போக்குவரத்து கழக ஊழியர்
உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஶ்ரீராம் நகரைச்சேர்ந்தவர் சாந்தி (வயது 54). இவரும் உடுமலையை அடுத்துள்ள சேரன் நகரைச்சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ( 56) என்பவரும் காதலித்து கடந்த 16.9.1996-ல் திருமணம் செய்து கொண்டனர். கோபாலகிருஷ்ணன், முன்பு பல்லடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
திருமணத்தைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணனும், சாந்தியும் உடுமலையில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒருமகன் உள்ளார். இதற்கிடையில் திருமணத்திற்கு ஒரு ஆண்டிற்குப்பிறகு கோபாலகிருஷ்ணன், வீட்டிற்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதுகுறித்து சாந்தி, கோபாலகிருஷ்ணணிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் சொல்லாமல் வந்துள்ளார்.
2-வது திருமணம்
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி முதல் வீட்டிற்கு வராமல் சாந்தியை விட்டு விலகிச்சென்றுள்ளார். கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வராததைத்தொடர்ந்து, சாந்தி பல்லடத்தில் அவர் பணியாற்றும் இடத்திற்கு சென்று விசாரித்தபோது, கோபாலகிருஷ்ணன் 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து குழந்தையும் உள்ள நிலையில் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டது குறித்து கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி சாந்தி, உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 25.2.2012-ம்தேதி புகார் செய்தார். இந்த புகாரின்பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 ஆண்டு சிறை
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடந்து வந்தது.இந்த வழக்கை விசாரித்த ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாபு, விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட கோபாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
கோபாலகிருஷ்ணன் தற்போது பொள்ளாச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பஸ் கூடுகட்டும் பிரிவில் எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.
Related Tags :
Next Story