உள்ளாட்சி தேர்தல் விதிமுறையை மீறி பணம், பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா? பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


உள்ளாட்சி தேர்தல் விதிமுறையை மீறி பணம், பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா? பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 16 Sept 2021 10:59 PM IST (Updated: 16 Sept 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி பணம், பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா? என பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந் தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13-ந்தேதி அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மேற்கண்ட 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்வார்கள்.

பறக்கும் படை குழுக்கள்

இதனை கண்காணித்து தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் ஒரு அரசு அலுவலர், ஒரு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் என 4 பேர் பணியில் இருப்பார்கள்.
இந்த குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருந்து மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

அதன்படி இந்த பறக்கும் படை குழுவினர் நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வேன், லாரி, சரக்கு வாகனம், மினி லாரி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்து வருகின்றனர். விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் நில எடுப்பு தனி தாசில்தார் ராணி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளிலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story