புன்செய் புகளூர் நகராட்சியில் சேர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு
நஞ்சை புகளூர் ஊராட்சியை புன்செய் புகளூர் நகராட்சியில் சேர்க்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நொய்யல்,
புன்செய் புகளூர் நகராட்சி
கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் பேரூராட்சியுடன் காகித ஆலை பேரூராட்சியை இணைத்து புன்செய் புகளூர் நகராட்சியாக தமிழக சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதன்பிறகு புகளூர் நகராட்சியுடன் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நஞ்சை புகளூர், திருக்காடுதுறை, கோம்புப்பாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கப்போவதாக கூறப்பட்டது.
கருத்துக்கேட்பு கூட்டம்
இதுதொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்பதற்காக மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார். இந்தநிலையில் நன்செய் புகளூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் நன்செய்புகளூர் ஊராட்சி பதவிக்காலம் முடிந்ததும் புன்செய் புகளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேபோல் ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைத்தால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு அறவே கிடைக்காது. இதனால் கூலித்தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள்.
கலெக்டருக்கு கடிதம்
ஏழைகளுக்கு வழங்கப்படும் பசுமை வீடுகள் மற்றும் பல்வேறு சலுகைகள் கிடைக்காது என்பதால் நன்செய் புகளூர் ஊராட்சியை புன்செய் புகளூர் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், இதனை மீறி இணைத்தால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story