நகை திருப்ப வந்த பெண்ணிடம் வங்கி மேலாளராக நடித்து ரூ.1 லட்சம் அபேஸ்


நகை திருப்ப வந்த பெண்ணிடம் வங்கி மேலாளராக நடித்து ரூ.1 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 17 Sept 2021 12:04 AM IST (Updated: 17 Sept 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் நகையை திருப்ப வந்த பெண்ணிடம் வங்கி மேலாளராக நடித்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரமக்குடி,

பரமக்குடியில் நகையை திருப்ப வந்த பெண்ணிடம் வங்கி  மேலாளராக நடித்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமிைய போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வங்கி மேலாளர் என கூறி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 50). இவர் பூட்டு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்த 5 பவுன் நகையை திருப்புவதற்காக ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை கொண்டு வந்துள்ளார்.
அப்போது வங்கிக்குள் டிப்-டாப்பாக உடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பாண்டியம்மாளிடம் வந்து, தான் வங்கியின் மேலாளர் குமார் என்று கூறி, உங்கள் கடனில் சிலவற்றையும், வட்டியையும் தள்ளுபடி செய்கிறோம். எனவே ரெவின்யூ ஸ்டாம்ப் மற்றும் டைப் அடித்த மனுவும் தபால் அலுவலகத்துக்கு சென்று வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

பணத்துடன் தப்பிய ஆசாமி

 உடனே பாண்டியம்மாள், அவர் கூறியதை நம்பி தான் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை அந்த டிப்-டாப் ஆசாமியிடம் கொடுத்துவிட்டு தபால் அலுவலகத்துக்கு சென்று விவரம் கேட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அப்படி எதுவும் இல்லை என கூறியுள்ளனர்.
உடனே தான் ஏமாந்து விட்டதாக நினைத்த பாண்டியம்மாள் அழுதுகொண்டே வங்கிக்கு வந்துள்ளார். அங்கு வந்து பார்த்தபோது அந்த டிப்-டாப் மர்ம ஆசாமியை காணவில்லை. உடனே பதறி அழுத பாண்டியம்மாள் நடந்த விவரத்தை வங்கி ஊழியர்களிடம் தெரிவித்து உள்ளார்.

கண்காணிப்பு ேகமராவில் பதிவானது

இதை தொடர்ந்து வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில் டிப்-டாப் உடை அணிந்த மர்ம ஆசாமி உருவம் தெரிந்தது. உடனே இது குறித்து பரமக்குடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Next Story