ஓட ஓட விரட்டி பா.ஜனதா பிரமுகர் கொலை


ஓட ஓட விரட்டி பா.ஜனதா பிரமுகர் கொலை
x
தினத்தந்தி 17 Sept 2021 12:33 AM IST (Updated: 17 Sept 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் ஓட ஓட விரட்டி பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கையில் ஓட ஓட விரட்டி பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பா.ஜனதா பிரமுகர்

சிவகங்கையில் நெல்மணி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). இவருடைய மனைவி ஸ்வேதா (37). இவர்களுக்கு மாலினி (17) கவுசிகா (13) ஆகிய 2 மகள்களும் கோகுல் (15) என்ற மகனும் உள்ளனர். முத்துப்பாண்டி சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. மீனவர் அணி மாவட்ட துணைத்தலைவராக இருந்தார்.
நேற்று மாலை 5.30 மணி அளவில் முத்துப்பாண்டி வீட்டு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் முத்துப்பாண்டியை வாளால் சரமாரியாக வெட்டினர்.

ஓட ஓட விரட்டி கொலை

 அவர்களிடம் இருந்து தப்பிக்க முத்துப்பாண்டி அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டினார்கள். பின்னர் அவர்கள் தப்பிவிட்டனர்.
சிவகங்கை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துப்பாண்டியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீஸ் குவிப்பு

இது பற்றி தகவல் கிடைத்ததும் பா.ஜனதா கட்சியினர் ஏராளமானவர்கள் மருத்துவமனையில் கூடினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் முத்துப்பாண்டி உடலை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவியது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் முத்துப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பா.ஜனதா பிரமுகரை கொலை செய்துவிட்டு தப்பியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிக்கிய மோட்டார் சைக்கிள்

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற செல்வம் என்பவரது கொலைக்கு பழிக்குப்பழியாக தற்போது முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் முத்துப்பாண்டியை கொன்ற கொலையாளிகள் தப்பி செல்ல முயன்ற போது ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகாததால் அதை விட்டு விட்டு ஓடியுள்ளனர். அதை போலீசார் கைப்பற்றினர்.
 அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து ெகாலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story