அகரத்தில் ஒரே குழியில் 3 உறைகிணறுகள் தென்பட்டன


அகரத்தில் ஒரே குழியில் 3 உறைகிணறுகள் தென்பட்டன
x
தினத்தந்தி 17 Sept 2021 12:39 AM IST (Updated: 17 Sept 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

7-ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் ஒரே குழியில் 3 உறை கிணறுகள் தென்பட்டன.

திருப்புவனம்,

7-ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் ஒரே குழியில் 3 உறை கிணறுகள் தென்பட்டன.

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி மட்டுமன்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அகரத்தில் ஏற்கனவே மண்பாண்டங்கள், செங்கல் சுவர், சுடுமண் பொம்மைகள், பெரிய- சிறிய நத்தை ஓடுகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் முதலில் ஒரு குழியில் நான்கு அடுக்குகளுடன் கூடிய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு இரண்டாவது முறையாக மற்றொரு குழியில் ஆய்வுப்பணிகள் நடைபெற்றபோது அதிலும் ஒரு சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குழியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் 14 அடுக்குகள் வரை உறை கிணறு இருந்தது தெரிய வந்தது.

3 உறைகிணறுகள்

 இந்த நிலையில் மற்றொரு குழியில் கடந்த வாரம் தோண்டியபோது 8 அடி ஆழத்தில் 3-வதாக ஒரு உறை கிணற்றின் மேல்பாகம் வெளிப்பட்டது. அதன் மேல் பகுதி வட்ட வடிவில் ஒரு மூடியை போன்று காணப்படுகிறது. அதே குழியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டபோது அருகிலேயே 2 உறைகிணறுகள் தென்பட்டுள்ளது. ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் தென்படுவது இதுவே முதல் தடவையாகும். முதலில் வெளிப்பட்டது மூன்று உறை அடுக்குகளுடனும், இரண்டாவது வெளிப்பட்டது 2 உறைஅடுக்குகளுடனும், மூன்றாவது வெளிப்பட்டது 2 உறை அடுக்குகளுடனும் தெரிகிறது. மேலும் இந்த குழியில் பணிகள் மேற்கொண்ட போது தெளிவான ஆற்று மணல் அதிகம் கிடைத்து வருகிறது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும் போது இன்னும் கூடுதலாக உறைஅடுக்குகள் கிடைக்கலாம் எனவும் தெரியவருகிறது. இதற்கிடையே தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அகரத்தில் ஒரே குழியில் 3 உறை கிணறுகள் தென்பட்டதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Next Story