மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண பொருட்கள்
தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் செலவில் நிவாரண பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
சிவகாசி
தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் செலவில் நிவாரண பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
நிவாரண பொருட்கள்
தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் மேகநாதரெட்டி ரூ.4 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை 304 மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார், ஸ்ரீசத்யசாயி சேவாமிருதம் பசுபதி, பள்ளியின் தாளாளர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுமை விடியல்
மாவட்ட கலெக்டரின் சிறப்பு முயற்சியாக அனைத்து அரசு துறைகளை யும் ஒருங்கிணைத்து பசுமை விடியல் என்ற தலைப்பின் கீழ் தரிசாகவும், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், பயனற்ற நிலையில் உள்ள நிலங்களை தேர்வு செய்து அறிவியல் முறைப்படி நிலத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு, மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கவும் பசுமை விடியல் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேண்டுராயபுரம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி முகமை மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 20 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை மேம்படுத்துவதற்கு பெருமளவு மரகன்று நடும் பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் வேண்டுராயபுரம் கிராமத்தில் ரூ.31½ லட்சம் செலவில் பண்ணைக்குட்டைகள், கால்நடை தீவன பயிர்கள், மூலிகை செடிகள், பூச்செடிகள், பழ மரக்கன்றுகள், அடர்காடுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி, சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், என்ஜீனியர் சக்தி முருகன், சிவகாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, திருத்தங்கல் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story