மின்வாரிய ஊழியர் தற்கொலை
மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவெறும்பூர்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி வல்லாளகண்டன் நகரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 32). மின்வாரிய விஜிலன்ஸ் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்தார். பெற்றோர், சகோதரர் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வசித்து வந்த இவர், நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சி உய்யகொண்டான் திருமலை இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள தனது சித்தப்பாவிடம் வீடியோ கால் மூலம் பேசிய அவர், தனக்கு வாழப் பிடிக்காததால் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவர், இளையராஜாவின் நண்பர்களிடம் உடனடியாக சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதன்பேரில், நண்பர்கள் இளையராஜா வீட்டுக்கு விரைந்து சென்று கதவை உடைத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உருக்கமான வேண்டுகோள்
இந்தநிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக இளையராஜா எழுதியிருந்த 2 பக்க கடிதத்தை நவல்பட்டு போலீசார் கைப்பற்றினர். அதில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான நான் அதிலிருந்து மீள முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன். மது ஒருவனது வாழ்க்கையை எப்படி எல்லாம் அழிக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். உறவினர்கள், நண்பர்கள் என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு முழு காரணம் மது பழக்கம் தான். என்னை போல வேறு யாரும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி விட வேண்டாம். மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் எனது பெற்றோருக்கு மீண்டும் நான் பிள்ளையாக பிறக்க வேண்டும். அதுவே எனது ஆசை என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story