சேலத்தில் ரூ.1½ கோடி தங்கம்,வெள்ளி பொருட்கள் பறிமுதல்-அதிகாரிகள் வாகன தணிக்கையில் சிக்கியதால் பரபரப்பு
சேலத்தில் ரூ.1½ கோடியில் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் வாகன தணிக்கையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலத்தில் ரூ.1½ கோடியில் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் வாகன தணிக்கையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாகன தணிக்கை
சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் கோட்ட வணிகவரித்துறை அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சந்தேத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அதாவது தங்க நகைகள், வெள்ளி நகைகள், வெள்ளிக்கட்டிகள், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
ரூ.1½ கோடி மதிப்பு
இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த தங்கம்- வெள்ளி பொருட்களுக்கு போதிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் அதில் 183 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் அரைக்கிலோ தங்க நகைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.26 லட்சம் எனவும் கூறப்படுகிறது. போதிய ஆவணங்கள் இல்லாததால் தங்கம்- வெள்ளி பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், அந்த பொருட்கள் எந்த ஊரில் இருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது? அந்த பொருட்களை அனுப்பி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரபரப்பு
தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய அவை கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
சேலத்தில் வாகன தணிக்கையில் ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story