சேலத்தில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்-பெற்றோருக்கு போலீசார் அறிவுரை
சேலத்தில் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.
சேலம்:
சேலத்தில் சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.
தொலைபேசியில் தகவல்
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நபர், கருங்கல்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து செவ்வாய்பேட்டை ரோந்து பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்றனர். அப்போது அங்கு காலையில் திருமணம் நடக்க முன் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருமணம் நடக்க உள்ள மணமகன், மணமகள் ஆகியோரின் பெற்றோரை அழைத்து போலீசார் விசாரித்தனர்.
திருமணம் தடுத்து நிறுத்தம்
விசாரணையின் போது, பெண்ணிற்கு வயது என்ன ஆகிறது என்று விவரம் கேட்டனர். அதற்கு அவர்கள் 18 வயது என்றும், மணமகனுக்கு 28 வயது என்றும் கூறினர். பின்னர் பெண்ணின் பிறந்த தேதியை கேட்ட போது 18 வயது முடியவில்லை என்பதும், 17 வயதே ஆகி இருப்பதையும் போலீசார் உறுதிபடுத்தினர்.
இதையடுத்து இருவீட்டாரின் பெற்றோரிடம், பெண்ணுக்கு 18 வயது ஆகாமல் திருமணம் நடத்தினால் மணமகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு குறைந்தது 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படுவதுடன், இரு தரப்பு பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர். அதன்பேரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் இருவீட்டாரையும் சமூக நலத்துறை அதிகாரிகள் சந்தித்து அவர்களும் உரிய அறிவுரைகள் வழங்கினர். சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story