கோவில் குளத்தில் பிணமாக மீட்பு: பள்ளி மாணவரை அடித்துக்கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது
தாயுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன், பள்ளி மாணவரை அடித்துக்கொன்று உடலை கோவில் குளத்தில் வீசினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள நெடும்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்ற காமராஜ் (வயது 40). இவருடைய மனைவி துர்கா (30). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களின் மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யா (14) என்பவரை தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்தார். சூர்யா, 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி முதல் சூர்யா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தனது பேரனை கண்டுபிடித்து தருமாறு கோவிந்தசாமி சோழவரம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் மாயமான சூர்யா, நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நத்தம் கிராமத்தை சேர்ந்த கோபால் என்ற கோபாலகிருஷ்ணன் (24) என்பவர்தான் சூர்யாவை மோட்டார் சைக்கிளில் கடைசியாக அழைத்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து கோபாலகிருஷ்ணனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் செல்வத்துக்கும், அவருடைய மனைவி துர்காவுக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் துர்கா, கணவருடன் கோபித்துக்கொண்டு நத்தம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது துர்காவுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபாலகிருஷ்ணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. துர்காவுடன் கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணன் உல்லாசமாக இருந்ததை அவருடைய மகன் சூர்யா நேரில் பார்த்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன், இதுபற்றி சூர்யா தன்னுடைய தந்தையிடம் கூறி விடுவான் என கருதினார். இதனால் 9-ந்தேதி சூர்யாவை கோபாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று அடித்துக்கொலை செய்து விட்டு, அவனது உடலை கோவில் குளத்தில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணனை கைது செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துர்காவை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story