தொல்காப்பிய பூங்காவில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


தொல்காப்பிய பூங்காவில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
x
தினத்தந்தி 16 Sep 2021 11:58 PM GMT (Updated: 16 Sep 2021 11:58 PM GMT)

தொல்காப்பிய பூங்காவினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 22.1.2011-ம் ஆண்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவினை (58 ஏக்கர்) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்பு பணிகள் மற்றும் சுமார் ரூ.2 ஆயிரத்து 773.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூர் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் எண்ணூர் கழிமுகப் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய கடல்சார் ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. வேலு (மயிலாப்பூர்), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முதன்மைச் செயலாளர் டாக்டர் சீ.ஸ்வர்ணா, தெற்கு வட்டார துணை கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story