அடுத்தடுத்து 2 மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


அடுத்தடுத்து 2 மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Sept 2021 9:30 PM IST (Updated: 17 Sept 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் அடுத்தடுத்து 2 மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்: 


தொடர் மழை
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நகரில் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடி நடமாடினர். மேலும் பலர் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். தொடர் மழை காரணமாக சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 
இந்தநிலையில் நேற்று 4-வது நாளாக நகரில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, காலை 11 மணிக்கு தொடங்கிய மழை, மதியம் 2 மணி வரை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. 

மரங்கள் சாய்ந்தன
இதற்கிடையே கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு செல்லும் மலைப்பாதையில் குருசடி என்ற இடத்தின் அருகே தொடர் மழையால்  சாலையோரமாக நின்றிருந்த 2 பெரிய மரங்கள் அடுத்தடுத்து வேரோடு சாய்ந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக மரங்கள் சாய்ந்து விழுந்தபோது இருசக்கர வாகனங்களோ, பிற வாகனங்களோ சாலையில் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரங்கள் சாய்ந்து விழுந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படை போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் சாய்ந்த மரங்களை எந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர். 

போக்குவரத்து பாதிப்பு
சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மரங்கள் சாய்ந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் மரங்கள் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. 

Next Story