விருத்தாசலம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 மாதங்களுக்கு பிறகு மீட்பு


விருத்தாசலம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 மாதங்களுக்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 17 Sep 2021 4:56 PM GMT (Updated: 17 Sep 2021 4:56 PM GMT)

விருத்தாசலம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி 10 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருத்தாசலம், 

குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராம்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை ராம்குமார் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாத்தா, விருத்தாசலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திய ராம்குமாரையும் தேடி வந்தனர். இருப்பினும் 10 மாதங்கள் ஆகியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

வாலிபர் கைது

இதையடுத்து கடத்தப்பட்ட மாணவியை மீட்க, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேலம் அடுத்த எருமபாளையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் எருமபாளையத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவியை மீட்டனர். மேலும் அவரை கடத்திய ராம்குமாரை கைது செய்தனர்.

Next Story