உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே பத்திர எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு பொதுமக்களிடம் பிடிபட்ட மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
பத்திர எழுத்தர்
உளுந்தூர்பேட்டை சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விஜயமாநகரத்தில் வசித்து வந்த அன்பழகனின் தாயார் காசியம்மாள் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அன்பழகன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு விஜய மாநகரத்துக்கு சென்றார்.
ரூ.60 ஆயிரம் கொள்ளை
இதை அறிந்து கொண்ட 2 மர்மநபர்கள் அன்பழகன் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
இதைப் பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சந்தேகமடைந்து மர்ம நபர்களை மடக்கிப் பிடித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்போது மர்ம நபர்கள் இருவரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினர்.
தப்பி ஓட்டம்
இதனால் பொதுமக்கள் அவர்களை நெருங்க தயக்கம் காட்டினர். இதையடுத்து 2 மர்ம நபர்களும் கொள்ளையடித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்து உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானை காட்சிகளின் அடிப்படையில் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பத்திர எழுத்தர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு பொதுமக்களிடம் சிக்கிய மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடியசம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story