வீடுபுகுந்து திருடிய கொள்ளை கும்பல் சிக்கியது; 42 பவுன் நகை மீட்பு
கடையம் பகுதியில் வீடுபுகுந்து திருடிய கொள்ளை கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
கடையம்:
கடையம் பகுதியில் வீடுபுகுந்து திருடிய கொள்ளை கும்பல் சிக்கியது. அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
வீடுபுகுந்து திருட்டு
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவநாடானூரைச் சேர்ந்த முத்துராஜா என்பவரது வீட்டில் கடந்த மாதம் 13-ந் தேதி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த 33½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். முன்னதாக கோவிலூற்றைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 9 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிப்பதற்காக, ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன் மேற்பார்வையில், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
5 பேர் கைது
இதில் நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த பழவூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ராமையா (வயது 35), அவருடைய உறவினரான வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து முத்துராஜா, கணேசன் ஆகியோரது வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
பின்னர் அந்த நகைகளை சேரன்மாதேவி தனியார் நிதி நிறுவன மேலாளரான சிவகுமரேசன் மூலமாக முக்கூடலைச் சேர்ந்த பிச்சுமணி, நெல்லை டவுனைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரிடம் விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷ், கார்த்திக், சிவகுமரேசன், பிச்சுமணி, கார்த்திகேயன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 42 பவுன் நகைகளை மீட்டனர்.
கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ரமேஷ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story