மரப்பாலம் அமைக்க நடவடிக்கை


மரப்பாலம் அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Sept 2021 1:13 AM IST (Updated: 18 Sept 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டாறில் மரப்பாலம் அமைக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி கூறினார்.

உடுமலை
மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டாறில் மரப்பாலம் அமைக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி கூறினார். 
மாவட்ட வன அலுவலர்
 திருப்பூர் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக தேஜஸ்வி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து அவர்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
 உடுமலையை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதில் உடுமலை, அமராவதி வனச்சரகப் பகுதிகளில்  வனவிலங்குகள், அரியவகை மூலிகை மரங்கள் அதிகம் உள்ளன. வனச்சரக பகுதிகளில் குருமலை, மஞ்சம்பட்டி உள்ளிட்ட 19 மலைவாழ் செட்டில்மெண்ட் குடியிருப்புகள் உள்ளன. மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அவர்களுக்கு, வன உரிமைச்சட்டப்படியான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும். தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராம மக்கள் பயன்படுத்தும் கூட்டாறு பகுதியில் மரப்பாலம் அமைப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு மரப்பாலம் அமைப்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
 இயற்கை மருந்து தெளிப்பு
வன எல்லைப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதைத்தடுப்பதற்காக இயற்கை மருந்தை தண்ணீரில் கரைத்து ஸ்பிரே மூலம் விளை நிலங்களின் எல்லைப்பகுதிகளில் தெளித்து வருகின்றனர். அதன் வாசனை காரணமாக காட்டுப்பன்றிகள் விளைநிலங்கள் பகுதிகளுக்கு வருவதில்லை. இந்த இயற்கை மருந்தை தெளிப்பதால் மனிதர்களுக்கும் பாதிப்பில்லை.
 இந்த முறையை உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகப்பகுதிகளில் நடைமுறைபடுத்துவது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 





Next Story