கல்யாண-கர்நாடக வளர்ச்சிக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு- பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கல்யாண-கர்நாடக வளர்ச்சிக்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
ரூ.3,000 கோடி நிதி
கல்யாண கர்நாடக உதயமான தின விழா கலபுரகியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் திறந்த வேனில் சென்றபடி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
கல்யாண கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு கர்நாடக அரசு இதுவரை ரூ.8 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதல் இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2,000 கோடி வருகிற மார்ச் மாதத்திற்குள் செலவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்யாண கர்நாடக வளர்ச்சி வாரியத்திற்கு ஏற்கனவே ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆகமொத்தம் அந்த வாரியத்திற்கு ரூ.3,000 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இது கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
பொருளாதார திட்டங்கள்
அரசியல் சாசனப்படி இந்த பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின் பலன்களை வழங்கும் அலுவலகம் இந்த பகுதிக்கே மாற்றப்படும். நஞ்சுண்டப்பா குழுவின் பரிந்துரைப்படி இந்த பகுதியில் சமூக-பொருளாதார, கல்வி திட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்படும். இந்த பகுதியில் அமல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசீலனை செய்வேன்.
எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஐதராபாத்-கர்நாடக என்று இருந்ததை கல்யாண கர்நாடக என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பகுதியின் வளர்ச்சிக்காக அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அந்த திட்டங்கள் அனைத்தையும் தொடர்ந்து அமல்படுத்துவோம். இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும்.
புதிய இந்தியா
பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டை வழிநடத்தும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இன்று (நேற்று) அவரது பிறந்த நாள். புதிய கர்நாடக, புதிய இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story