முன்னாள் மந்திரி ஆபாச வீடியோ வழக்கில் 27-ந் தேதி வரை இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தடை - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
முன்னாள் மந்திரியின் ஆபாச வீடியோ வழக்கில் வருகிற 27-ந் தேதி வரை கோர்ட்டில் இறுதி விசாரணை அறிக்கை தாககல் செய்ய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
5 பொது நல மனுக்கள்
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியானது குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும், ஆபாச வீடியோ வழக்கை சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும், சிறப்பு விசாரணை குழு போலீசார் நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி 5 விதமான பொதுநல மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த 5 மனுக்கள் மீதான விசாரணையும் ஒட்டு மொத்தமாக கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஸ் சந்திரசர்மா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந்தேதி இளம்பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் இந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததால், விசாரணையை 17-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அறிக்கை தாக்கல் செய்ய...
அதன்படி, தலைமை நீதிபதி முன்னிலையில் நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது சிறப்பு விசாரணை குழு போலீசார் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி, ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீசார் அனைத்து விசாரணையையும் நடத்தி முடித்திருப்பதால், இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு இளம்பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் இந்திரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
27-ந் தேதி வரை தடை
அவர் வாதிடும் போது, சிறப்பு விசாரணை குழு போலீசாரின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி இருப்பதுடன், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆபாச வீடியோ வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய அவசரப்படுவது சரியில்லை. இதற்கு கோர்ட்டு அனுமதி அளிக்க கூடாது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை இறுதி விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய தடை விதித்து போலீசாருக்கு, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story