ஏற்காட்டில் சரக்குவேன் பள்ளத்தில் பாய்ந்ததில் 2 பேர் பலி


ஏற்காட்டில் சரக்குவேன் பள்ளத்தில் பாய்ந்ததில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 Sept 2021 3:21 AM IST (Updated: 18 Sept 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து வந்த டி.வி. நாடகத்தொடர் படப்பிடிப்புக்குழுவினர் வந்த சரக்கு வேன் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்தனர்.

ஏற்காடு:
சென்னையில் இருந்து வந்த டி.வி. நாடகத்தொடர் படப்பிடிப்புக்குழுவினர் வந்த சரக்கு வேன் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்தனர்.
டி.வி. தொடர் படப்பிடிப்பு குழு
சென்னையை சேர்ந்த டி.வி. நாடகத்தொடர் படப்பிடிப்பு குழுவினர் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தங்கி சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகலில் ஏற்காடு அருகே உள்ள பக்கோடா பாயிண்ட் பகுதியில் இந்த டி.வி. தொடர் குழுவினர் படப்பிடிப்பு நடத்தினர். 
பின்னர் பெலாத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் ஒரு சரக்கு வேனில் மாலை 5 மணியளவில் சென்றனர். சரக்குவேனை ஈரோட்டை சேர்ந்த சங்கர் ஓட்டிச்சென்றார்.
வளைவான பகுதியில் லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனை அறிந்த சரக்கு வேன் டிரைவர் சங்கர் மெதுவாக வேனை திருப்பினார். ஆனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையோரத்தில் உள்ள சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
2 பேர் பலி
இந்த விபத்தில் சரக்குவேனில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பாண்டியன் (வயது 41), தேனியை சேர்ந்த சஞ்சய் (33) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் சரக்கு வேனில் பயணம் செய்த கவுரி சங்கர், பேச்சியப்பன் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே காயம் அடைந்தவர்களை ஊர் பொதுமக்கள் பள்ளத்தில் இருந்து தூக்கி வந்து சாலையில் படுக்க வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி மற்றும் இன்ஸ்பெக்டர் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 
8 பேருக்கு சிகிச்சை
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த 9 பேரையும் முதலுதவி சிகிச்சைக்காக வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மேலும் விபத்தில் பலியான பாண்டியன் மற்றும் சஞ்சயின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story