சேலத்தில் வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
சேலத்தில் வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய செல்போன் எண்ணின் வாட்ஸ்-அப்புக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் இணையதளம் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், நாங்கள் கொடுக்கும் வேலையை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்தால் நீங்கள் செலுத்திய பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை நம்பிய வினோத்குமார் குறுஞ்செய்தியில் கூறப்பட்ட வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 120 செலுத்தினார். அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு இதுதொடர்பாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத்குமார் இந்த மோசடி குறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இந்த நூதன மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story