போலீஸ் போல் நடித்து முதியவரை மிரட்டி 15 கிலோ ரேஷன் அரிசி, பணம் வழிப்பறி


போலீஸ் போல் நடித்து முதியவரை மிரட்டி 15 கிலோ ரேஷன் அரிசி, பணம் வழிப்பறி
x
தினத்தந்தி 18 Sept 2021 4:11 AM IST (Updated: 18 Sept 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே போலீஸ் போல் நடித்து முதியவரை மிரட்டி 15 கிலோ ரேஷன் அரிசி, பணத்தை வழிப்பறி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

பூந்தமல்லி, 

மதுராந்தகத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், வடபழனியில் உள்ள தனது மகன் ராமசந்திரன் வீட்டுக்கு வந்தார். பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு மகன் வீட்டில் இருந்து 15 கிலோ ரேஷன் அரிசியை எடுத்துக்கொண்டு மீண்டும் மதுராந்தகம் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக முதியவர் காத்து நின்றார்.

அப்போது மர்மஆசாமி ஒருவன், தன்னை கோயம்பேடு போலீஸ் என்று கூறி, முதியவர் மாரிமுத்துவிடம் ரேஷன் அரிசி கடத்துகிறாயா? என மிரட்டினார். இதனால் பயந்து போன மாரிமுத்து, எனது மகன் வீட்டில் இருந்து வாங்கி வருகிறேன். வேண்டுமானால் எனது மகனுக்கு போன் செய்து தருகிறேன், பேசுங்கள் என்றார். ஆனால் அதற்கு மறுத்த ஆசாமி, போலீஸ் நிலையம் வரும்படி மாரிமுத்துவிடம் கூறினார். பின்னர் மாரிமுத்துவின் சட்டை பையில் இருந்த ரூ.4 ஆயிரம், செல்போன் மற்றும் 15 கிலோ ரேஷன் அரிசியை பறித்துவிட்டு அவரை மிரட்டி அங்கிருந்து விரட்டி அடித்தார்.

மாரிமுத்து மீண்டும் மகன் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறினார். பின்னர் இதுபற்றி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்டது உண்மையான போலீசா? அல்லது போலீஸ் போல் நடித்து மர்மநபர் வழிப்பறியில் ஈடுபட்டாரா? என கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Next Story