வெங்கப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
வெங்கப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெங்கப்பாக்கத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலுக்கு 31 அடி உயரத்தில் புதிய தேர் 3 நிலைகளுடன் காணப்படுகிறது. 2 குதிரைகள், துவாரபாலகி, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் ஒரு ஆண்டு காலத்தில் தேரை தத்ரூபமான முறையில் சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைத்துள்ளனர். இதையடுத்து அம்மன் வீதி உலாவுடன் தேரோட்டம் நடந்தது. பொன்னியம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்டம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடந்து வெங்கப்பாக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான பக்தர் கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
5 மணி நேரத்துக்கு பிறகு
அசைந்தாடிய நிலையில் தேர் செல்லும்போது அம்மனுக்கு பக்தர்கள் பூமாலைகள் செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். கிழக்கு கடற்கரை சாலையை கடந்து, சதுரங்கப்பட்டினம் சாலை வழியாக தேர் செல்லும்போது மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சதுரங்கப்பட்டினம்-கல்பாக்கம் சாலையில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தேரில் மின் விளக்கு வெளிச்சத்தில் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த பொன்னியம்மனை ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆராதனை செய்து வழிபட்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு வெங்கப்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிய தேர் 5 மணி நேரத்துக்கு பிறகு நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை பொன்னியம்மன் கோவில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story